Showing posts with label Gautam Vasudev Menon. Show all posts
Showing posts with label Gautam Vasudev Menon. Show all posts

Tuesday, March 8, 2011

நடுநிசி நாய்கள்-ஒரு பொதுப் பார்வையில்

               
                 ஒரு திரைப்படமாய் ஏனோ மனதைச் சென்றடையவில்லை.அருமை என்றும் கூற இயலாது,மாறாய் ஒரு புதுமுயற்சி,மேனனிடமிருந்து,வரவேற்கலாம்.படம் படுமோசம் காட்சிகள் எல்லைமீறியதாய் இருப்பதாய் கூறுபவர்களுக்கு,அவ்வாறெனில் முதலில் நீங்கள் பெரும்பாலான ஹாலிவுட் படங்களைப் பார்த்து அருமை என்று சொல்வதை தவிர்க்க வேண்டும்.இரண்டாவது,செல்வராகவன் போன்றவர்களின் படங்களில் உணர்ச்சிகள் மிக்கது என்ற போர்வையில் காண்பிக்கப்படும் காட்சிகளைப் பார்த்து ஆஹா ஒஹோ என்றும் என்னை பாதித்தது என்றும் கூறி சோகம் கொண்டு கனத்த மனதுடன் செல்பவர்கள் அதையே சமூகம் என்ற பார்வையில் கூறியதும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்,புரியவில்லை(அதற்காக செல்வராகவன் படங்களை குறை கூறவில்லை).மூன்றாவது,எண்ணம் எப்படியோ?! உலகும் அப்படியே,இதை நான் கூறவில்லை,ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு மிருகம் உண்டு என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை.ஆனால்,கெளதம் மேனனும்,சமூகத்திடையே ஆழமாகப் பதிக்கப்படவேண்டிய கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.அதை அவர் ஒழுங்காய் சொல்லத் தவறியதாய் தோன்றுகிறது.த்ரில்லர் என்று பெயரிட்டுவிட்டதாலும் பார்ப்பவர்களுக்கு அதில் வரும் துப்பாக்கியும் பைத்தியத்தனமும்,ரத்தமும் சதையும்தான் பிரதானமாகத் தெரியுமே தவிர(இதுவும் ஒரு மனித இயல்பே),அவர்களைப் போய் சேரவேண்டிய செய்தி அதிலே மறைக்கப்பட்டுவிடுகிறது.ஆனால்,சைக்கோ த்ரில்லர் படமாய் துவக்கி நேஷனல் ஜியாக்ரபிக் டாகுமெண்டரி போல் முடித்துவிட்டார் (அந்த டாக்டரைப் பார்த்தால் கூட டிஸ்கவரியில் வரும் அறிவியல் வல்லுநர் போல்தான் இருக்கிறார்).ஹீரோ சப்ஜக்ட் என்று தொடங்கி போலீசை இறுதியில் வரவழைத்து முடிக்கும் படங்களைப் போல.கௌதம் இது சமுகத்திற்கு செய்தி சொல்வதற்காய் எடுத்தபடமா? அவ்வாறெனில் திரையை பார்க்க இயலாது அக்கம் பக்கம் திரும்பி நெளியவைக்கும் காட்சிகள் சிலதை தவிர்த்திருக்கலாம்.த்ரில்லர் என்பதாயின் கடைசியில் அந்த நீண்ட விளக்கம் தேவையில்லை என்பது போல் தோன்றுகிறது.அதனால் இறுதியில் இது எந்த வகை சார்ந்த படம் என்று சிறிது நேரம் குழப்பம் நிலவுகிறது.படத்தில் இசையற்று இருப்பது போன்ற உணர்வு ஏனோ தோன்றவில்லை,இரவு நேரங்களில் இயற்கையாய் தோன்றும் சத்தங்களை உபயோகப்படுத்தி இருப்பது காரணமாக இருக்கலாம்.சிறிது நேரமே வந்தாலும் தன் பார்வையிலும் தன் ஒரு சிரிப்பிலேயுமே தன்னைப் பற்றி கூறிவிடும் நோயாளியாக சமந்தா,பாராட்டுக்கள்.வீரா,இனிமேல் த்ரில்லர் படங்களுக்கு தமிழ் திரையுலகம் இவரை நிரந்தரமாக நியமித்துவிடாதிருந்தால் சரி.முதல் படமாயினும் சைக்கோவாக நன்றாகவே தன்னை காண்பித்திருக்கிறார்,சமீராவிடம் புல்வெளியில் அமர்ந்து பேசுகையில் வீராவாக அந்த முகத்தில் நிலவும் அமைதியும் சட்டென்று சமராக மாறுகையில் அதே முகத்தில் தானாகத் தோன்றும் ஆத்திரமும் கோபமும் என இவர் நடிப்பு நன்று.உடல் எரிந்த நிலையில்,அதாவது சமரின் கற்பனை மீனாக்ஷி, ஏனோ அவருக்கு அந்த பாத்திரம் ஒத்துவராதது போல் தோன்றுகிறது.முன்பே குறிப்பிட்டது போல,படத்தில் வரும் சைக்கோத்தனமும் காட்சிகளும்தான் பார்த்தவர்களுக்குப் பிரதானமாய்த் தெரிந்ததே தவிர,மன உளைச்சல்களும் மன அழுத்தமும் மன ரீதியான இன்னபிற பாதிப்புகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லலாம் என்ற உண்மையை,பார்த்து படத்தை வெறுத்துவிட்டு சென்றவர்கள் உணரவில்லை என்றுதான் கூறவேண்டும்.உணரவில்லை எனில் மனம் இன்னும் வளரவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளவும் முடியும்.