தம்பியுடன் தியேட்டருக்கு சென்று பார்த்த இரண்டாவது,விஷால் படம்,முதலாவது "தோரணை".அப்படத்தைப் பற்றி அந்த தலைப்போடு நிறுத்திக்கொள்வோம்.அவன்-இவன்,மிக நாட்களாகவே சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த படம்.பல காரணங்கள் அதற்கு.முதலில்,படத்தின் இயக்குனர் பாலா,தனது கதைக்களங்களுக்காகவும்,வித்தியாசமான பாத்திரப்படைப்புகளுக்காகவும் அப்பாத்திரங்களுக்கு அவர் ஊட்டும் உயிருக்காகவும் பெயர் போனவர்.விஷால்,கமர்ஷியல் படங்களில் மட்டுமே அதிகம் நடித்துப் பழக்கப்பட்ட விஷாலை தன் பாத்திரங்களில் ஒன்றாக பாலா தேர்ந்தெடுத்தது,அதுவும் வித்தியாசமான பாத்திரமாக.ஆர்யா,பாலாவின் "நான் கடவுள்" மூலம் பெரும்பாலான சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பச்செய்தவர்(என்னை இல்லை),இவர் மீண்டும் பாலாவுடன் இணைந்து ஒரு படம்.யுவன் ஷங்கர் ராஜா-வின் இசை.மிக நாட்களுக்கு முன்னரே வந்த படத்தின் போஸ்டர்கள்.17-ஆம் தேதிவரை வந்துகொண்டிருந்த படத்தின் ட்ரைலர்கள்.ஆக,எல்லோரைப் போல் நானும் அதிகம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த படம்.சென்ற வாரம்தான் ஆரண்ய காண்டம் பார்த்துவிட்டு, புதுமுக இயக்குனர் குமாரராஜாவே இப்படி ஒரு படம் எடுக்கும்பொழுது,"சேது"பாலாவின் படம் எப்படி இருக்கும் என்று மனதிற்க்குள் எதிர்ப்பார்ப்பை இன்னும் கூட்டிய படம்.பதினாறாம் தேதி இரவு விஜய் டிவியில் விஷாலின் பேட்டியின்போது படத்திற்கான அவரது உழைப்பு பற்றி கேட்டு,அப்படி என்னதான் கதை படத்திற்கு என்று யோசித்துக்கொண்டிருந்தேன், படம் பார்த்து முடித்து இந்நொடி வரை அதைதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.சேது தொடங்கி நான் கடவுள் வரை ஏதோ ஒரு கதைப்பின்னணியைச் சுற்றி பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்,ஆக அங்கு பாத்திரங்கள் பைத்தியமாக வருவதற்க்கும் பித்தனாக வருவதற்கும் காரணம் இருந்தது.இங்கு கடைசிவரை,விஷால் ஏன் மாறுகண் பார்வை உடையவராக வருகிறார் என்றே தெரியவில்லை,மாறுகண் பார்வை இல்லாமலேயே அப்பாத்திரத்தை படம் முழுதும் நகர்த்தி இருக்க முடியும் புதிய மற்றும் வித்தியாசமான பாத்திரப் படைப்புகளுக்கு பெயர்போன பாலா அப்பணியை மட்டுமே செவ்வனே செய்துவிட்டு கதையை இப்படத்தில் மறந்துவிட்டாரோ என தோன்றும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.விஷாலின் அபாரமான உழைப்பு உன்மையில் தேவையற்றது படத்திற்கு.பிதாமகனில் வரும் அதே செம்பட்டை தலை விக்ரம் போல ஆர்யா, சூர்யாவின் இடத்தில் அதே போல் விஷால்.போலிஸாக வரும் ஜனனியின் பாத்திரமோ லைலாவையே நினைவூட்டுகிறது.அம்பிகா பாத்திரம் சங்கீதாவை.படத்தில் வரும் விஷாலும் ஆர்யாவும்,ஏன் அவர்களது அம்மாக்கள் அம்பிகாவும் பிரபாவும் கூட திருடர்கள் சாயல் முகத்தில் கொண்டிருந்தாலும் அது முகத்தில் துளியும் ஒட்டாத வண்ணம் அந்த அப்பா பாத்திரம்(குரல்வளப் பயிர்ச்சியாளர் அனந்த்).படத்தின் போஸ்ட்டர்களில் அவனையும்-இவனையும் மிகைப்படுத்தாதிருந்திருந்தால் ஒருவேளைப் படத்தைப் பார்த்த என் போன்றோருக்கு ஜி எம் குமார் கதாநாயகனாகப் பட்டிருக்கலாம்.ஒரு வேளை அந்த பார்வையில் சென்றிருந்தால் படத்தின் கரு கிடைத்திருக்கும்.பார்த்த எங்களுக்கு ஆர்யாவும் விஷாலுமே கதையின் நாயகர்கள் என்று முன்னரே மனதில் பதிந்துவிட்டதால்,அவரைச் சுற்றி கதை நகர்வதாகவும் தெரியவில்லை.ஒருவேளை பாலாவும் எங்களைப் போன்று இதே தவறைத்தான் செய்துவிட்டாரோ?!.அதனால் படத்தின் தலைப்புக் கூட பொருந்தாதது போல ஒரு தோற்றம்.இடைவேளை வரை கதை செல்லும் பாதை வேறு,இடைவேளைக்குப் பிறகு பிதாமகனில் இருந்து கத்தரித்து ஒட்டிவிட்டது போல் இருந்தது.திருடிப் பிழைப்பவர்கள் என்றாலும் பல இடங்களில் அவர்களே உபயோகிக்கத் தயங்கும் கொச்சை சொல் வசனங்கள்.எஸ்.இராமகிருஷ்னணா?! என்று ஆச்சரியப்படும் அளவிற்கு.இவ்வாறு சொற்களை உபயோகித்து எழுதினால் அதுமட்டுமே மேதமை என்றும் வெளிப்படைத்தன்மை என்ற எண்ணமும் மனரீதியாக மனிதர்கள் பலருக்கு உண்டு.அந்த எண்ணம் இவருக்கு தொற்றிக்கொண்டுவிடக் கூடாது என்பது என் வேண்டுகொள்.தனித்தனி கதாப்பாத்திரங்களாக அனைவரும் ரத்தம் சிந்தி உழைத்திருந்தாலும்,கதை என்ற ஒன்று இல்லாமல் படம் மனதைச்சென்றடைய மறுக்கிறது.திரைக் கதையாக அல்லாமல் ஒருவேளை சிறுகதையாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது.ஒரே ஆறுதல் படத்திற்கு யுவனின் இசை, சோகத்திற்க்கான பின்னனிஇசையில் இவர் ஏனோ இளையராஜாவை நினைவு படுத்திவிடுகிறார்.மொத்ததில் அவன்-இவன் எவன்?.
No comments:
Post a Comment